கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசி உருவாக்கம்: பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக பாரத் பயோடெக் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகையே மிரள வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி மருந்துகளை உருவாக்குதல் என்பது தற்போது உலகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலாக இருக்கிறது. கொரோனா தடுப்பூசிக்காக 200 க்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அதற்கான பணிகள் பல்வேறு நிலைகளில் இருப்பதாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்),தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) உடன் இணைந்து கோவிட் -19க்கான இந்தியாவின் முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவேக்சின் என்று அழைக்கப்படும் அந்த தடுப்பூசியை, 2020ம் ஆண்டு ஜூலை மாதம் நாடு முழுவதும் இரண்டு கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர், இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரின் ஒப்புதல் பெற்றுள்ளது என்று பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.

புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம், அறிகுறியற்ற கொரோனா  நோயாளியிடமிருந்து SARS-CoV-2 வைரஸ் திரிபு தனிமைப்படுத்தப்பட்டு பாரத் பயோடெக்கிற்கு மாற்றப்பட்டது. இது குறித்து பாரத் பயோடெக் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் கிருஷ்ணா எலா கூறியதாவது: முன்கூட்டிய ஆய்வுகளின் முடிவுகள் நம்பிக்கைக்குரியவை இருக்கின்றன. மேலும் விரிவான பாதுகாப்பு மற்றும் பயனுள்ள நோயெதிர்ப்பு சக்தியை சோதனைகள் காட்டுகின்றன என்றார்.

கோவேக்சின் தவிர, பாரத் பயோடெக் நிறுவனமானது, ஏற்கனவே அமெரிக்காவைச் சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பாளரான ஃப்ளூஜென் மற்றும் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்டுகளுடன் கூட்டு சேர்ந்து தடுப்பூசி ஒன்றை உருவாக்க உள்ளது. புதிய தடுப்பூசியை உருவாக்குவதற்காக பிலடெல்பியாவில் உள்ள தாமஸ் ஜெபர்சன் பல்கலைக்கழகத்துடன் பிரத்யேக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி