டில்லி

சீரம் இன்ஸ்டிடியூட் தடுப்பூசியான கோவிஷீல்ட் ஐ விட பாரத் பயோடெக் தடுப்பூசி கோவாக்சின் விலை மலிவாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பரவல் குறையாமல் உள்ள நிலையில் இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு இயக்குநரகம் கடந்த 3 ஆம் தேதி இரு தடுப்பூசிகளுக்கு அவசர கால ஒப்புதல் அளித்துள்ளது.  இவை சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிப்பான கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவன தயாரிப்பான கோவாக்சின் ஆகியவை ஆகும்.  இந்த இரு மருந்துகளுமே ஒரே மாதிரியானவை மற்றும் 2-8 டிகிரியில் சேமித்து வைக்கக் கூடியவை ஆகும்.

இந்த மருந்துகளில் சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கோவிஷீல்ட் மருந்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்டிரா ஜெனிகா நிறுவனம் இணைந்து உருவாக்கியது ஆகும்.  இந்த மருந்தை ஒரு டோஸ் இந்திய அரசுக்கு ரூ.200 எனவும் தனியாருக்கு ரூ.1000 எனவும் விற்பனை செய்ய உள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் திட்டமிட்டுள்ளது.,

பாரத் பயோடெக் நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசியை இந்திய அரசுக்கு மேலும் மலிவான விலையில் விற்கப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.   இந்த தடுப்பூசிகள் விலை சரிவரத் தெரிவிக்காவிடினும்  சீரம் இன்ஸ்டிடியூட் விலையை விடக் குறைவாக இருக்கும் எனவும் மருந்துகள் எண்ணிக்கையைப் பொறுத்து விலை மேலும் குறைக்கப்படலாம் எனவும் பாரத் பயோடெக் இயக்குநர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.