டெல்லி: பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி 2021ம் ஆண்டு பிப்ரவரிக்குள் கிடைத்துவிடும் என்று ஐசிஎம்ஆர் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் களம் இறங்கி உள்ளன. இந்தியாவிலும் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் மும்முரம் அடைந்து உள்ளன.

ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து கோவாக்சின் என்ற  தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த மருந்தானது, அடுத்தாண்டு 2வது காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டது.

இந் நிலையில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி 2021ம் ஆண்டு பிப்ரவரிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று ஐசிஎம்ஆர் நம்பிக்கை தெரிவித்துள்ளது.  ஐசிஎம்ஆரின் விஞ்ஞானியும், கோவிட் -19 தேசிய பணிக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் ரஜ்னி காந்த் கூறி இருப்பதாவது:

இந்த தடுப்பூசி நன்றாக செயல்படுகிறது. அடுத்த ஆண்டு, பிப்ரவரி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் இதை எதிர்பார்க்கலாம். பிப்ரவரியில் கோவாக்சின் அறிமுகப்படுத்தப்பட்டால், இது இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் தடுப்பூசி ஆகும் என்றார்.

இந்தியாவின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் தடுப்பூசியான, கோவாக்சின் 3ம் கட்ட மனித சோதனைகளை நடத்துவதற்கு பாரத் பயோடெக் சமீபத்தில் ஒப்புதல் பெற்றது குறிப்பிடத்தக்கது.