டில்லி

பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்று தொடங்கி உள்ளது.

உலகெங்கும் உள்ள பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.   அமெரிக்காவில் இரு தடுப்பூசிகள் ஒப்புதலுக்குத் தயார் நிலையில் உள்ளன.   ரஷ்ய நாட்டின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் தயார் நிலையில் உள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் இரு கட்ட சோதனை முடித்துள்ளது.   அந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைக்காக இந்நிறுவனம் இந்திய மருத்துவ கட்டுப்பாட்டாளருக்கு விண்ணப்பித்து அதற்கு அனுமதி கிடைத்துள்ளது.    ஏற்கனவே இந்த மருந்தின் இரு கட்ட சோதனையில் 1000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இதில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன.

இன்று இந்த மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைகள் தொடங்கி உள்ளன.  இந்த சோதனையில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து 26000 ஆர்வலர்கள் பங்கு பெற உள்ளனர். இந்த பரிசோதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து நடைபெற உள்ளது.  இந்த சோதனை இந்தியாவில் நடைபெறும் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஆகும்.