என் துணைவியாரைக் காட்டிலும் அதிகமாக நேசித்த ஒரு மகா ஒளிப்பதிவுக் கலைஞன் பி. கண்ணன் : இயக்குனர் பாரதிராஜா

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா இயக்கிய படங்களில் ‘நிழல்கள்’ தொடங்கி ‘பொம்மலாட்டம்’ வரை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் கண்ணன்.

சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .

அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது பலன் அளிக்காததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.

சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 13) பிற்பகல் 2 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 69.

இவர் இயக்குநர் பீம்சிங்கின் மகன், முன்னணி எடிட்டரான லெனினின் சகோதரர் ஆவார்.

தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவு குறித்து இயக்குநர் பாரதிராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

“என்னுடன் பெரும்பகுதியைக் கழித்த, என் துணைவியாரைக் காட்டிலும் அதிகமாக நேசித்த ஒரு மகா ஒளிப்பதிவுக் கலைஞன் பி. கண்ணன். “நான் படப்பிடிப்புக்கு கேமராவை எடுத்துச் செல்வதில்லை. என் கண்ணனின் இரண்டு கண்களைத் தான் எடுத்துச் செல்கிறேன். அவருக்குத் தான் ஆகாயத்தின் மறுபக்கத்தையும் பார்க்கத் தெரியும்” என்று சொல்லியிருக்கிறேன். 40 ஆண்டு காலம் அவரோடு இணைந்து பணியாற்றி, இன்றளவும் என்னால் அவருடைய மறைவை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

என்னோடு 40 ஆண்டுகள் இருந்தான். இன்று இல்லை என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எனக்குக் கிடைத்த இந்தப் புகழ், மண் வாசனை, மக்கள் கலாச்சாரம் இதெல்லாம்தான் உங்களுக்கு என்னை அறிமுகப்படுத்தியது. அதில் கிடைத்த பெயர், புகழ் ஆகியவற்றில் பெரும்பங்கு என் கண்ணனுக்குத்தான் சேர வேண்டும்.

உலகத் தமிழர்கள் அத்தனை பேரும் இந்தக் கலாச்சாரத்தை, பண்பாட்டை ஒளிப்பதிவின் மூலம் உலகிற்குச் சொன்ன அற்புதமான கலைஞனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்க வேண்டுகிறேன்” என கூறியுள்ளார் .