கோரிக்கைகள் நிறைவேறாமலே விவசாயிகள் போராட்டம் வாபஸ்

டில்லி

கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் பாரதிய கிசான் யூனியன் நடத்திய விவசாயிகள் போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

பாரதிய கிசான் யூனியன் என்னும் விவசாயிகள் சங்கம் கிசான் கிரந்தி பாதயாத்திரை என்னும் நடை பயண போராட்டத்தை நடத்தியது.   இந்த போராட்டத்தில் விவசாயக்கடன் தள்ளுபடி,  விளைபொருட்களுக்கு சரியான விலை உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் தொடங்கப்பட்டது.

இந்த யாத்திரை முன்னாள் பிரதமர் சரண்சிங் நினைவிடமான கிசான் காட் என்னும் இடத்தில் நிறைவு பெறும் என அறிவிக்கபட்டிருந்தது.   ஆனால் விவசாயிகள் நேற்று காலை தலைநகருக்குள் நுழைந்த போது தடுத்து நிறுத்தப்பட்டனர்.   அதை ஒட்டி காசியாபாத் எல்லையில் விவசாயிகள் இருந்ததால் அந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விவசாயிகள் அனைவரும் அவர்கள் வந்த டிராக்டரில் தலைநகருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.   விவசாயிகள் கிசான் காட்டை அடைந்தது. பாரதிய கிசான் யூனியன் என்னும் விவசாய சங்கத் தலைவர் போராட்டத்தை இத்துடன் நிறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.  இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விவசாயிகளின் 11 கோரிக்கைகளில் 7 கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு ஒப்புக் கொண்டதாக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.    ஆனால் அவர்களின் முக்கிய கோரிக்கையான விவசாயக் கட்ன் தள்ளுபடி மற்றும் விளைபொருட்களுக்கான சரியான விலை ஆகியவை குறித்து அரசு எதுவும் தெரிவிக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ், “எங்களுடைய முக்கிய நோக்கம் கிசான் காட் வரை பாத யாத்திரை செல்வதே ஆகும்.   அந்த நோக்கம் நிறைவேறியதால் போரட்டத்தை முடித்துக் கொண்டோம்.  அரசு எங்களை தலைநகரில் ஊர்வலம் சென்று யாத்திரையை முடிக்க அனுமதித்தது போராட்டத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி” என  தெரிவித்துள்ளது விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.