புற்றுநோய் விழிப்புணர்வுக்காக 10,000 கி.மீ. பயணித்த பெண்!

--

டில்லி:

பாருலதா பட்டேல் காம்ப்ளே (45), குஜராத் மாநிலம், நவ்சாரியைச் சேர்ந்தவர். இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணான இவர், கடந்த 9-ம் தேதி, தனது 2 மகன்களுடன் குளிர்கால பயணமாக சுமார் 10,000 கி.மீ. தொலைவு பயணித்து ஆர்டிக் வட்டத்திற்கு சென்று சாதனை படைத்துள்ளார். இந்த குளிர்கால பயணத்தை முடித்த முதல் பெண்மணி ஆவார் இவர்.

மேலும், இவர் புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும்போது இந்த 10,000 கி.மீ. பயணத்தை நிறைவு செய்தார் என்பதே இவரது சாதனையின் சிறப்பாகும்.

இந்த பயணத்தின் மூலம், பாருலதாவின் 2 மகன்கள், பிரிய்யம் (12) மற்றும் ஆருஷ் (10), ஆர்க்டிக் வட்டாரத்தில் மூவர்ணக்கொடியை ஏந்திய முதல் இந்திய வம்சாவளி சிறுவர்கள் ஆனர்.

“ஆர்க்டிக் வட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பது என் குழந்தைகளின் யோசனை. இது புற்றுநோயிலிருந்து என் மனதை வேறு திசைக்கு மாற்றும் என்று அவர்கள் நினைத்தார்கள். எனது குடும்பத்தினர் மகிழ்ச்சியின் காற்றழுத்தமானி நான் என்பதால், இதைச் செய்ய முடிவு செய்தேன்,” என்கிறார் 45 வயதான பாருலதா காம்ப்ளே.

பல்வேறு தொழில்துறைகளைச் சார்ந்த பெண்கள், அந்தந்த தொழில்களில் சாதனை படைக்கும்போது, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதல் பெண்மணி’ என்ற ஜனாதிபதி விருது இந்திய அரசால் வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம், பாருலதா இந்த விருதை பெற்றார் என்பது குறிப்பித்தக்கது.

ஆட்டோமொபைல் ஆர்வலரான பாருலதா, 2016 ஆம் ஆண்டில் ஆர்க்டிக் வட்டம் மற்றும் 32 நாடுகளுக்கு தன்னந்தனியாக பயணித்த ‘உலகின் முதல் பெண்மணி’ என்ற பெருமைக்குரியவர்.

கண்டங்கள் கடந்து செல்கிற பயணத்தில், 39 மணி நேரத்திற்கு 2,792 கிமீ தூரத்தை கடந்து சாதனை படைத்தார். மேலும், ஆர்க்டிக் வட்டத்தில் மூவர்ண கோடியை ஏந்திய முதல் இந்திய பெண்மணியும் இவரே.

தனது சாதனை குறித்து அவர் கூறுகையில், “ஏற்கனவே, மார்பக புற்றுநோய்க்கான நான்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டேன். புற்றுநோயானது வாழ்க்கையின் முடிவு அல்ல என்று பலருக்கும் நிரூபிக்க நினைத்தேன். எனவே, என் மகன்கள் இந்த கருத்தை முன்வைத்தபோது, ​​உடனடியாக எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருடன் ஆலோசித்து, அவரது ஒப்புதல் பெற்றதும், அக்டோபர் 22 முதல் நவம்பர் 9 வரை நாங்கள் பயணம் செய்ய தீர்மானித்தோம். தற்போது, யுனிவர்சல் ரெகார்ட்ஸ் ஃபாரம் எங்கள் சாதனையை அங்கீகரித்துள்ளது,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “இன்று இந்திய பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவது புற்றுநோயால் தான். எனவே, இதை பற்றி நான் வெளிப்படையாக பேசுவதன் மூலம் மார்பக புற்றுநோய் வெட்கத்திற்குரிய விஷயம் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். எனவே பெண்களே, ‘எச்சரிக்கையாக இருங்கள், புற்றுநோயிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என்ற பிரச்சாரமே இந்த பயணத்தின் நோக்கமாகும்,” என்றார்.

தற்போது, பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய பாருலதா, டிசம்பர் 11ம் தேதி அவருக்கு நடக்கவிருக்கும் மற்றொரு புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகிறார்.