திருப்பூர்,

வானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளாவை கண்டித்து போராட்டம் நடத்த அனைத்துகட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து வரும் 29ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என அனைத்துக்கட்சி குழு அறிவித்து உள்ளது.

கேரளாவில் இந்த நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் ஓபிஎஸ் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், அணை கட்டுவதை உடனே நிறுத்த மத்திய நீர் வளத்துறைக்கு உத்தரவிடுமாறு கோரி உள்ளார்.

நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியில் உருவாகும் பவானி ஆறு, கேரளாவின் முக்காலி, அட்டப்பாடி வழியாக மீண்டும் தமிழகத்தில் நுழைந்து கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு வந்து சேர்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பில்லூர் அணைக்கு முன்பாக 30 கிமீ தூரத்தில் கேரளாவின் தேக்கோட்டை எனும் கிராமத்தின் வழியாக செல்லும் பவானி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு துவங்கியுள்ளது.

அங்கு 20 அடி உயரத்திற்கு தடுப்பணை கட்ட திட்டமிட்டு, அதற்கான மணல், கல் மற்றும் ஜல்லி கற்கள், சிமென்ட் கலவை ஆகியவற்றுடன் பணியை துவங்கியுள்ளது. இதற்காக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குழி தோண்டும் பணி நடந்து வருகிறது.

இதன் காரணமாக திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பவானி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரளாவுக்கு எதிராக ஜனவரி 29ல் போராட்டம் நடத்தப்படும்  என அனைத்து கட்சிகள் அறிவித்துள்ளனர்.

இந்த போராட்டம், ஆனைக்கட்டியில் இருந்து புறப்பட்டு தேவக்குவட்டையில் கேரளா அணை கட்டும் இடத்தை முற்றுகையிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே  கடந்த 14 ஆண்டுக்கு முன்பு கேரள பகுதியிலுள்ள பவானி ஆற்றில் முக்காலி எனுமிடத்தில் தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு மேற்கொண்டது. அப்போது தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பால், அது தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.