மகாராஷ்டிரா : காந்தியின் உயிரைக் காப்பாற்றியவர் மரணம்

பிலார், மகாராஷ்டிரா

காந்தியின் உயிரை 1944ஆம் வருடம் கோட்சேயிடம் இருந்து காத்த மகாராஷ்ட்ராவை சேர்ந்த பிக்கு தாஜி பிலாரே மரணம் அடைந்தார்.

மகாத்மா காந்தி கோட்சேயால் ஏற்கனவே 1944ல் கொல்ல முயற்சிக்கப்பட்டதாகவும், அதை பிக்கு தாஜி பிலாரே இடையில் புகுந்து தடுத்து காந்தியை காத்ததாகவும் கூறப்படுகிறது, அவரை மக்கள் அன்புடன், பிலாரே குருஜி என அழைத்து வந்தனர்.  பிக்கு தாஜி பிலாரெ தற்போது மரணம் அடைந்தார்.

காந்தியை பிலாரே காப்பாற்றியதற்கான ஆதாரபூர்வ தகவல் எதுவும் இல்லை.  ஆனால் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தனது புத்தகத்தில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.  புத்தகத்தில், காந்தியக் கொல்ல 1948க்கு முன்னர் நான்கு முறை முயற்சி நடந்தததாகவும், அதில் பிலாரே 1944ல் காந்தியை காப்பாற்றியதாக கூறப்படுவது மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கில், இரண்டாவது முயற்சி என சொல்லப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

“காந்தி ஆகாகான் மாளிகை சிறையில் இருந்து 1944ஆம் வருடம் மே மாதம் விடுவிக்கப்பட்டார்.  அவரை மலேரியா நோய் தாக்கியது.  மருத்துவரின் கூற்றுப்படி அவர் புனே அருகிலுள்ள பாஞ்சாக்னி என்னும் இடத்தில் தில்குஷ் பங்களாவில் ஓய்வெடுத்துக்கொண்டார். அப்போது காந்தியை எதிர்க்கும் சுமார் 20 பேர் தனியார் பேருந்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பஞ்சாக்னி வந்தனர்.  அவர்களின் தலைவரான நாதுராம் கோட்சேவை பேச்சுவார்த்தை நடத்த காந்தி அழைத்தார்.  ஆனால் கோட்சே மறுத்துவிட்டார்.

நாதுராம் கோட்சே நண்பர்களுடன்

அன்று மாலை நடந்த பிரேயர் கூட்டத்தில் நேரு ஜாக்கெட் அணிந்தபடி கோட்சே நண்பர் ஒருவருடன் வந்தார்.  தனது கையில் வைத்திருந்த கத்தியால் காந்தியைக் குத்திக் கொல்ல பாய்ந்தார்.  ஆனால் பிக்கு தாஜி பிலாரே, மற்றும் இன்னொருவரும் சேர்ந்து கோட்சேவை தடுத்து வெளியேற்றினார்கள்.  கோட்சேவுடன் வந்த நண்பரும் அங்கிருந்து வெளியேறி விட்டார்” என அந்தப் புத்தகத்தில் இந்த சம்பவம் பற்றி உள்ளது.

இதை கடந்த 2008ல் நடந்த ஒரு நிகழ்வில் பிலாரே குருஜி நினவு கூர்ந்துள்ளார்.  மாலை கடவுள் வணக்கம் நிகழ்ந்த போது கோட்சே காந்தியை திட்டியபடி அவர் மேல் பாய்ந்ததாகவும், பின் தான் அவர் கையை முறுக்கி கத்தியை கீழே விழ வைத்ததாகவும் கூறி உள்ளார்.  மேலும் அங்குள்ள தொண்டர்கள் கோட்சேவை அங்கிருந்து விரட்டி விட்டதாகவும், அங்கு கோபால் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோரும் நாதுராம் உடன் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பிலாரே 1919 ஆம் வருடம் நவம்பர் 28ஆம் தேதி பிறந்தவர்.  இறக்கும் போது மஹாராஷ்டிரா மாநிலம், பிலார் என்னும் இடத்தில் வசித்து வந்தார்.  அவர் மரணத்தால் ஊர் மக்கள் துக்கம் அடைந்தனர்.  அன்னாரது உடல், அதே கிராமத்தில் உறவினர்களால் தகனம் செய்யப்பட்டது.