போபால்

த்தியப் பிரதேச தலைநகர் போபால் நகரில் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவின் பிறந்த நாளை கொண்டாடிய அமைப்புக்கு காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேச தலைநகரம் போபாலில் ஆர் ஆர் எல் கிராசிங்கில் வீர சாவர்க்கர் சேது என்னும் பாலம் அமைந்துள்ளது.    இந்த பாலக்கரையில் விழா ஒன்றை அகில பாரத இந்து மகாசபை என்னும் இந்துத்வ அமைப்பு  நடத்தியது.    மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்று தூக்கு தண்டனை பெற்ற கோட்சேவின் பிறந்த நாளை  கொண்டாட அந்த விழாவை இந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

கோட்சேவின் உருவப்படத்தை அலங்கரித்து அதற்கு மாலை மரியாதை செய்யப்பட்டது.  அத்துடன் அங்கிருந்தவர்களுக்கு குளிர் பானங்களை அந்த அமைப்பினர் அளித்துள்ளனர்.   இதை அறிந்த போபால் நகர இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கிருஷ்ண காட்கே இந்த கொண்டாட்டத்தை நிறுத்தச் சொல்லி உள்ளார்.   அவருடன் சென்ற மற்ற காங்கிரஸ் தொண்டர்கள் கோட்சேவை தாக்கி கோஷம் இட்டுளனர்.

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவின் பிறந்த நாளை கொண்டாடக் கூடாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   விஷயம் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து கலைந்து போக வைத்துள்ளனர். இந்து மகாசபையினர் கோட்சேவின் படம், மேஜை உள்ளிட்டவற்றை அங்கிருந்து எடுத்துச் சென்று விட்டனர்.

இது குறித்து அகில பாரத இந்து மகாசபையின் திவாரி, “எங்கள் இந்து மகாசபை கோட்சேவின் பிறந்த நாளை அமைதியாக கொண்டாடிக் கொண்டு இருந்தது.   காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு வந்து தகராறு செய்தனர்.   அமைதியை விரும்பியதால் நாங்களாகவே அங்கிருந்து கலைந்து சென்று விட்டோம்” என கூறி உள்ளார்.

காங்கிரசின் கிருஷ்ண காட்கே, “கோட்சேவின் பிறந்த நாளைக் கொண்டாடுவது மகாத்மா காந்தியை இழிவு படுத்துவதாகும்.   தேசத் தந்தையை இழிவு படுத்தும் எந்த ஒரு நிகழ்வையும் காங்கிரஸ் சகித்துக் கொள்ளாது.   அவ்வாறு ஒரு நிகழ்வு மாநிலத்தில் எங்கு நடந்தாலும் தடுத்து நிறுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.