போபால்

காவல்துறையை சேர்ந்த ஒருவர் தனது மனைவியின் கோபத்தைச் சமாளிக்க மைத்துனர் திருமணத்துக்குச் செல்ல வேண்டும் என 5 நாள் விடுமுறை கேட்டுள்ளார்.

மனைவிக்கு பயப்படுவோர் உலகெங்கும் உள்ள நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் அதற்கு விதி விலக்கு இல்லை.  மக்களை அச்சுறுத்தி வரும் காவல்துறை அதிகாரிகளையும் மனைவி மீதான அச்சம் விலகாமல் உள்ளது.   பலர் இதை வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கின்றனர்.   அவ்வகையில் மத்தியப் பிரதேச மாநில காவல்துறை அதிகாரியும் ஒருவராக உள்ளார்.

டிசம்பர் மாதம் 7 அன்று மத்தியப் பிரதேச மாநில காவல்துறை அதிகாரி ஒருவர் எழுதி உள்ள விடுமுறை விண்ணப்பத்தில் தனது மைத்துனர் திருமணத்துக்கு 5 நாட்கள் விடுமுறை தேவை எனக் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் தாம் இந்த திருமணத்தில் கலந்துக் கொள்ளா விட்டால் தனது மனைவியின் கோபத்தால் ஏற்படும் விளைவுகளை தம்மால் சமாளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடுமுறைக் கடிதம்  அதன் தனித்தன்மையால் இணையத்தில் வெளியாகி திலிப் குமார் அகிர்வார் என்னும் அந்த காவலருக்கு மிகுந்த அனுதாபத்தை அளித்துள்ளது.   ஆனால் இவருக்கு விடுமுறை வழங்குவதற்குப் பதிலாக நன்னடத்தை தவறிய அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.    அவரது விடுமுறைக் கடிதம் சரியான முறையில் இல்லை எனவும் தேவை இல்லாமல் ஊடகங்களில் பிரபலம் அடைய இவ்வாறு அவர் எழுதி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.