குஜராத் மாதவிடாய் சோதனை, சம்பவம்…… களத்தில் குதித்த தேசிய மகளிர் ஆணையம் அதிர்ச்சி….

குஜராத் மாதவிடாய் சோதனை, சம்பவம்.. தேசிய ஆணைத்திற்கே கிடைத்த அதிர்ச்சிகள்…

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் ஸ்ரீ சஜானந்தா பெண்கள் கல்லூரி ஒன்று விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள், மாதவிடாய் காலங்களில் கோவில் பக்கமும் சமையலறை பக்கமும் சர்வசாதாரணமாக நடமாடுகிறார்கள் என்று ஒரு தரப்பு கடுமையாக குற்றம்சாட்டிவந்தது..

இதையடுத்து நேரடியாக களத்தில் இறங்கிய கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் விடுதியின் தலைவர் ஆகியோர், 68 மாணவிகளை கழிவறைக்கு அழைத்து சென்று அங்கு வரிசையாக நிற்க வைத்து உள்ளனர்.

அதன்பிறகு அவர்களின் உள்ளாடைகளை வலுக்கட்டாயமாக கழட்ட வைத்து யார் யாருக்கெல்லாம் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது என்பதை பரிசோதித்து உள்ளனர்.

இந்த கொடூரமான சம்பவம் சம்பவம் பற்றி தகவல்கள் வெளியாகி, நேற்று முன்தினம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் அலறியடித்துக்கொண்டு நேரடியாக களத்தில் குதித்தது. நேற்று சம்பவம் நடந்த கல்லூரிக்கே மகளிர் ஆணையத்தின் உறுப்பினர்கள் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மாதவிடாய் எந்தெந்த மாணவிக்கு எப்போது நிகழும் என்பதை குறிப்புகள் வைத்துக்கொள்ளும் அளவிற்கு, பதிவேடு ஒன்றையே கல்லூரி நிர்வாகம் பிரத்யேகமாய் பராமரித்து வந்துள்ளது என்கிற விஷயம் தெரிய வந்திருக்கிறது..

பதிவேட்டின்படி, மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மற்ற மாணவிகளிடம் இருந்து தனிமைப் படுத்தப்பட்டு வந்துள்ளனர்.

மாதவிடாய் மாணவிகள் மற்ற மாணவிகளுடன் சேர்ந்து சாப்பிடவோ உறங்கவோ முடியாது. அவர்கள் தனியாகத்தான் உண்ண வேண்டும். தனி அறையில் தான் படுத்து உறங்க வேண்டும்..

மத நம்பிக்கைகளின் பெயரால் இவ்வாறு போதித்து கல்லூரி மற்றும் விடுதி நிர்வாகம், மாணவிகளை வழி நடத்தி வந்துள்ளது.

கல்லூரியின் இந்த நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள பெரும்பாலான மாணவிகள் சம்மதம் தெரிவித்து உள்ளனர் என்பதும் இன்னொரு அதிர்ச்சியான விஷயம்.

மாதவிடாய் தொடர்பான நிபந்தனைகளை ஏற்கும்படி மாணவிகள் கட்டாயப்படுத்தப்பட்டனரா என்பது குறித்து தற்போது தேசிய மகளிர் ஆணையம் விசாரித்து வருகிறது என்று சொல்கிறார் ஆணையத்தின் உறுப்பினரான ராஜுபென் தேசாய்.

இன்னொரு பக்கம் இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக குஜராத் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

-ஏழுமலை வெங்கடேசன்