இந்திய ரூபாய் நோட்டுக்களில் கள்ள நோட்டுக்கள் : பூட்டான் எச்சரிக்கை

திம்பு

பூட்டான் அரசு இந்திய ரூபாய் நோட்டுக்களின் கையில் வைத்திருப்பதை குறைக்க வேண்டும் எனவும் கள்ள நோட்டுக்கள் உலவுவதாகவும் அறிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் வருடம் நவம்பர் மாதம் எட்டாம் தேதி இந்திய அரசு 80% கரன்சி நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது.    அதைத் தொடர்ந்து புதிய ரூ.500, ரூ,2000 ஆகிய நோட்டுக்கள் புழக்கத்துக்கு வந்தன.    பிறகு ரூ.  200 நோட்டுக்களுடன் சிறிய அளவு மதிப்பிலும் புதிய நோட்டுக்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன.    இவ்வாறு நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததற்கு கள்ள நோட்டுக்கள் ஒழிப்பும் ஒரு முக்கிய காரணமாக அப்போது சொல்லப்பட்டது.

இந்தியாவின் அண்டை நாடான பூட்டானில் அந்நாட்டு கரன்சியுடன் இந்திய ரூபாய் நோட்டுக்களும் புழக்கத்தில் உள்ளன.    இந்திய ரூபாய் மதிப்பிழப்புக்குப் பின் அங்குள்ள இந்திய கரன்சிகள் புதிய கரன்சிகளாக மாற்றப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன.     இந்திய ரிசர்வ் வங்கி போல பூட்டானில் மத்திய வங்கி இயங்கி வருகிறது.

கடந்த 11 ஆம் தேதி பூட்டான் அரசின் அரசு கண்காணிப்புக் குழு அளித்துள்ள அறிக்கையில், ”இன்று (11-06-2018) முதல் பூட்டான் நாட்டின் பொதுமக்கள் தங்களிடம் இந்திய கரன்சி ரூ.25000க்கு மேல் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிவிக்கப்படுகிறது.    இந்த அறிவிப்பு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனைக்கு இணங்க வெளியிடப் படுகிறது.   அத்துடன் பூட்டான் மக்கள் தங்களிடம் உள்ள இந்திய ரூபாய் நோட்டுக்களை உடனடியாக தங்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவிட வேண்டும் என வலியுறுத்தப் படுகிறது.

ரூ. 25000 க்கு மேல் கையில் இந்தியப் பணத்தை வைத்திருப்பவர்களுக்கு பணமதிப்பிழப்பால் ஏதும் இழப்பு ஏற்பட்டால் அரசு பொறுப்பேற்காது.   மேலும் இந்திய ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் அவைகள் கள்ள நோட்டுக்கள் அல்ல என்பதை வங்கியில் காட்டி உறுதி செய்துக் கொள்ள வேண்டும்” என அறிவித்துள்ளது.

இதன் மூலம் இந்திய அரசு மீண்டும் பணமதிப்புழப்பு நடவடிக்கையை கொண்டு வரலாம் என அச்சத்தில் உள்ளனர்.  அத்துடன் பூட்டான் மத்திய வங்கி தங்கள் நாடு இந்திய எல்லையில் இருப்பதால் இந்திய கள்ள நோட்டுக்கள் நாட்டினுள் புழங்கலாம் என்னும் ஐயத்தில் இந்த ரூ.25000 அறிவிப்பை வெளியிட்டதாக கூறி உள்ளது.

பூட்டான் நாட்டு பொருளாதார நிபுணர்கள்,  ”இந்திய அரசு கள்ள நோட்டுக்களை ஒழிக்க அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து புதிய நோட்டுக்களை அறிமுகம் செய்தது.    ஆனால் அந்த புதிய நோட்டுக்களிலும் கள்ள நோட்டுக்கள் வெளி வந்துள்ளது.   இது இந்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தோல்வியை காட்டுகிறது.   மேலும் மக்கள் மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என அச்சம் கொள்வது உண்மயாகலாம் எனவும் தோன்றுகிறது” என தெரிவித்துள்ளனர்.