இந்தியாவிற்கு தண்ணீர் தருவதில் அக்கறை செலுத்தும் பூடான்..!

திம்பு: பூடான் நாட்டிலிருந்து அஸ்ஸாம் மாநிலத்திற்கு வழக்கமாக வரும் ஆற்றுநீர் தொடர்ந்து வந்துசேர்வதை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் பூடான் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் முகநூலில் தெரிவித்துள்ளார்.

டெய்ஃபாம்-உடல்குரி, சம்ராங்-பங்க்டார், மோட்டோங்கா-போக்காஜுலீ மற்றும் சேம்டிரப்ஜோங்கர் நகரம் – பட்கிகுலீ ஆகியவற்றிலிருந்து அஸ்ஸாம் மாநில விவசாயிகளுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைப்பதற்காக, கால்வாய்களை சரிசெய்யும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

முகநூலில் பதிவிட்ட அந்நாட்டு நிதியமைச்சர், “அண்டைநாடு முதலில்” என்ற பொருளில் முதல் வார்த்தையைப் பதிவிட்டுள்ளார். மேலும், “பூடான் & இந்தியா நாட்டு மக்களுக்கு இடையிலான நெருங்கிய நட்பு” என்ற வார்த்தைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பூடானின் மாவட்ட நிர்வாகம், துணைக் கோட்ட நிர்வாகம், மேயர் அலுவலகம் மற்றும் கோவிட்-19 தடுப்புக் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் நீர்வரத்துக்கான கால்வாய் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.