புதுடெல்லி: கடந்த 2013ம் ஆண்டிற்கு பிறகு நடைபெற்ற அனைத்து ஐசிசி தொடர்களிலும், நாக்-அவுட் போட்டிகளில் இந்தியா தோற்றதற்கு காரணம் துரதிருஷ்டம்தான் காரணம் என்று கூறியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்.

அவர் கூறியுள்ளதாவது, “கடந்த 2013ம் ஆண்டிற்கு பிறகு நடந்த ஐசிசி தொடரின் லீக் சுற்றுகளில் இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. ஆனால், நாக்-அவுட் சுற்றுகளில் கிடைக்கும் தோல்விகள் வருத்தத்தை அளித்தன. இதற்கு துரதிருஷ்டம்தான் காரணம்.

முதல் மூன்று டாப்-ஆர்டர் பேட்ஸ்மென்கள் விரைவில் ஆட்டமிழப்பது, எதிரணியை 250 ரன்களுக்குள் சுருட்டாமல் விடுவது ஆகிய காரணிகள் வெற்றியை தட்டிப்பறித்து விடுகின்றன. தோல்விக்கான காரணம் இதுதான் என்று சரியாக கண்டறிவது கடினமே” என்றார் அவர்.

கடந்த 2013ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற பிறகு, அதன்பிறகான ஆண்டுகளில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பைகள், டி-20 உலகக் கோப்பைகள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் ஆகியவற்றில் இந்திய அணி, நாக்-அவுட் சுற்றில் வெளியேறியது. இதைத்தான் இப்படி கவலையுடன் குறிப்பிட்டுள்ளார் புவனேஷ்வர் குமார்.