அமெரிக்க ஓபன் – 23 பட்டங்கள் வென்ற செரினாவை வென்றார் 19 வயது பியான்கா..!

நியூயார்க்: அனுபவம் வாய்ந்த செரினா வில்லியம்சை யாரும் எதிர்பாராத வகையில் தோற்கடித்து, அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்றுள்ளார் 19 வயதான கனடா நாட்டின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு.

பியான்கா ஆண்ட்ரீஸ்கு பெறுகின்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும் இது.

இந்தப் பட்டத்தை வென்றால், மொத்தம் 24 பட்டங்களை வென்று உலக சாதனையை சமன் செய்யலாம் என்று ஆசையோடு காத்திருந்த செரினாவின் ஆசையில் டென்னிஸ் பந்துகளை அள்ளிப் போட்டுவிட்டார் பியான்கா.

செரினாவுக்கு இது 33வது இறுதிப் போட்டி. ஆனால், பியான்காவுக்கோ இதுதான் முதல் முதன்மையான இறுதிப் போட்டி. விளையாட்டு என்று வந்துவிட்டால், சமயத்தில் எதுவும் நடக்கும் என்பதற்கு இப்போட்டியும் உதாரணம் ஆகிவிட்டது.

மார்கரெட் கோர்ட் என்பவர் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைப் பெற்றுள்ளதே இதுவரையான உலக சாதனையாக இருந்து வருகிறது. செரினா போன்ற ஒரு மாபெரும் போட்டியாளருடன் ஆடுவது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்ததென்று கூறுகிறார் பியான்கா.

தற்போது 37 வயதாகும் செரினா, தாய்மைப் பேறு அடைந்து, பின்னர் மீண்டும் விளையாட்டிற்கு திரும்பிய நிலையில் கலந்துகொண்ட 7 முதன்மை போட்டிகளில், இறுதிப்போட்டியில் தோற்கும் நான்காவது போட்டியாகும் இது.

கார்ட்டூன் கேலரி