புதுடெல்லி:
மெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றனர். வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதி வாக்குகளில், 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்க உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். அப்போது, இந்தோ-அமெரிக்க மூலோபாய கூட்டாண்மைக்கான எங்கள் உறுதியான உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்தினோம். முன்னுரிமை பிரச்சினைகள் மற்றும் கோவிட் -19 தொற்று நோய், காலநிலை மாற்றம் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு பற்றியும் நாங்கள் விவாதித்தோம் என பதிவிட்டுள்ளார்.

மேலும், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவரது வெற்றி துடிப்பான இந்திய-அமெரிக்க வம்சாவளி உறுப்பினர்களுக்கு மிகுந்த பெருமை மற்றும் உத்வேகம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.