புதுடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய எரிபொருள் சில்லறை வர்த்தக நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட்(பிபிசிஎல்) நிறுவனத்தை வாங்குவதற்கு பல ஏலதாரர்கள் முன்வந்துள்ளனர்.

அதேசமயம், இந்தியாவின் முதல் பணக்காரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமோ, செளதியின் அராம்கோ நிறுவனமோ, பிபி(BP) நிறுவனமோ ஏலம் கேட்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறையின் செயலாளர் டுஹின் காந்த பாண்டேதான் இந்த நிறுவனத்தின் விற்பனை விவகாரங்களை கவனித்து வருகிறார்.

“பிபிசிஎல் நிறுவனத்திலுள்ள அரசின் பங்கு 52.98% ஐ விற்பதற்கான பரிவர்த்தனை ஆலோசகர்கள், பல்வேறான ஏல விருப்பங்களைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன” என்றுள்ளார் காந்த பாண்டே.

“பரிவர்த்தனை ஆலோசகர்களின் ஆய்வுக்குப் பிறகு, பரிவர்த்தனையானது இரண்டாம் கட்டத்திற்கு செல்லும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேசமயம், பிபிசிஎல் நிறுவனத்தின் பங்கு விற்பனை செயல்முறை, இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிவீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.