ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பாஜகவுக்கும் அதன் பினாமி கட்சிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டி உள்ளனர் என்று முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா கூறி உள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் டிடிசி எனப்படும் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நவம்பர் மாதம் ஆரம்பித்து, டிசம்பர் 19ம் தேதி வரை 8 கட்டங்களாக நடந்தது. அறிவிக்கப்பட்டபடி இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.

காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை எதிராக  போராட்டம் நடத்தி வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலையான எதிர்க்கட்சி தலைவர்கள் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தலைமையில் ஓரணியில் திரண்டனர். அவர்கள் அமைத்திருந்த கூட்டணிக்கு குப்கார் கூட்டணி என்ற பெயர். இந்த பெயரிலேயே அவர்கள் தேர்தலை சந்தித்தனர்.

மொத்தம் உள்ள 280 இடங்களில் குப்கார் கூட்டணி 108 இடங்களிலும், பாஜக 60 இடங்களிலும், காங்கிரஸ் 22 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, பாஜகவுக்கும் அதன் பினாமி அரசியல் கட்சிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டி உள்ளனர் என்றார். மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவை மக்கள் நிராகரித்ததாகவும் அவர் கூறினார்.