வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, ரஷ்யாவுடன் சேர்ந்து எந்த சதிவேலையிலும் டொனால்ட் ட்ரம்ப் ஈடுபடவில்லையென சிறப்பு சட்ட ஆலோசகர் ராபர்ட் முல்லர் அறிக்கை தெரிவித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றாலும்கூட, அந்த வெற்றிக்காக அவர் ரஷ்யாவுடன் சேர்ந்து சதிசெய்தார் என்ற குற்றச்சாட்டு அவரின் மீது பலமாக விழுந்தது. எனவே, அதுகுறித்து விசாரணை நடைபெற்றது.

தற்போது, அப்படியான சதிசெயல்கள் எதுவும் நடைபெறவில்லையென அந்நாட்டினுடைய சிறப்பு சட்ட ஆலோசகர் ராபர்ட் முல்லரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆனால், அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் வில்லியம் பாரின் அறிக்கையின்படி, அமெரிக்க அதிபர், குற்றச்சாட்டிலிருந்து முற்றாக விடுவிக்கப்படவில்லை. அதேசமயம், அவர் ரஷ்யாவோடு சேர்ந்து சதிசெயலில் ஈடுபட்டார் என்பதற்கும் ஆதாரமில்லை என்று கூறப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர், முல்லர் அறிக்கை முழுமையாக வெளியிடப்பட வேண்டுமென கோரியிருக்கின்றனர்.

இந்த விசாரணையை தன்மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என விமர்சித்துள்ள ட்ரம்ப், “இந்த அறிக்கையின் அடிப்படையில், தான் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

– மதுரை மாயாண்டி