பெர்லின்: கால்பந்து விளையாட்டில், 5 மாற்று வீரர்கள் வரை களமிறங்குவதற்கு அனுமதியளிக்க, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; உலகம் முழுவதையும் கொரோனா ஆட்டிப்படைத்து வரும் நிலையில், பல விளையாட்டுத் தொடர்கள் ரத்துசெய்யப்பட்டு, பல விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட விளையாட்டுகளில், உலகளவில் மிக அதிக ரசிகர்களைக் கொண்ட கால்பந்தும் ஒன்று. ஒத்திவைக்கப்பட்ட பல கால்பந்து தொடர்கள், அடுத்துவரும் மாதங்களில் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளன. இதனால், வீரர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படுவதுடன், காயமடைவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.
எனவே, இதனைத் தவிர்க்கும் பொருட்டு, தற்போது நடைமுறையில் உள்ள 3 மாற்று வீரர்கள் என்ற நடைமுறைக்கு பதிலாக, 5 மாற்று வீரர்களை களமிறக்க அனுமதிக்கும் வகையில் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஃபிஃபா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை, ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றால் 6வது வீரரை களமிறக்கவும் அனுமதி தரப்படலாம் என்று கூறப்படுகிறது. வீரர்களின் நலனுக்காகவே இந்தப் புதிய விதிமுறை கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது.