லண்டன்: தனது கணவரும், இளவரசருமான பிலிப்பின் மறைவு, தனது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக வேதனையைப் பகிர்ந்துள்ளார் இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத்.

99 வயதாகும் இளவரசர் பிலிப், சமீபத்தில் மரணமடைந்தார். இந்நிலையில், அந்நாட்டில் தற்போது 8 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு, பிலிப்பின் உடல் அடக்கம் செய்யப்படும். தற்போது, மேற்கு லண்டனிலுள்ள விண்ஸ்டர் கோட்டையில் இவரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இவர், அரியணைக்காக காத்திருக்கும் பட்டத்து இளவரசர் சார்லஸின் தந்தையாவார்.

கொரோனா கட்டுப்பாடுகளை கவனத்தில் கொண்டு கூட்டத்தை தவிர்க்க இறுதிச்சடங்கின் பொது நிகழ்ச்சிகள் நீக்கப்பட்டுள்ளன. தேவாலயத்தில் உள்ள சபை வெறும் 30 பேர் பங்கேற்கும் வகையில் மட்டுமே உள்ளது.

தனது தந்தை மறைவு குறித்து இளவரசர் ஆண்ட்ரூ(மற்றொரு மகன்) கூறியதாவது, “என் தாய்க்காக நான் மிகவும் வருந்துகிறேன். இந்த இழப்பை மற்றவர்களைவிட அவர் அதிகம் உணர்கிறார். அவருக்கு ஆதரவாக உள்ளேன். என் தந்தையாக அவரை நேசிக்கிறேன். சிறப்புக்குரிய மனிதர் அவர். மிகவும் அமைதியானவர். அரச குடும்பமே பெரும் இழப்பை உணர்கிறார்கள். ராணியால் அவரது இழப்பை நம்ப முடியவில்லை. அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறார். தனது வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டுச்சென்றதாக குறிப்பிட்டார்” என்றுள்ளார் ஆண்ட்ரூ.