மோகன்லால் நடத்தும் மலையாள பிக் பாஸ் : நேற்று கோலாகல தொடக்கம்

திருவனந்தபுரம்

பிரபல நடிகர் மோகன்லால் நடத்தும் பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி மலையாள மொழியில் நேற்று தொடங்கி உள்ளது.

பல மொழிகளிலும் புகழ் பெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வீட்டினுள் பிரபலங்கள் எந்த ஒரு தொடர்பும் இன்றி தங்க வைக்கப்படுகின்றனர்.   அங்கு நிகழும் நிகழ்வுகள் பதியப்பட்டு கண்காணிக்கப் படுகின்றன.   கடைசி வரை இருப்பவருக்கு பரிசு கிடைக்கிறது.

இந்த நிகழ்ச்சி நடிகர் கமலஹாசனால் தமிழில் ஏற்கனவே நடத்தப்பட்டு வெற்றி அடைந்தது.   தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் நடந்துக் கொண்டு வருகிறது.  இரண்டாம் பாகத்தையும் கமலஹாசன் நடத்தி வருகிறார்.

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம் நேற்று கோலாகலமாக தொடங்கி உள்ளது.    இந்த நிகழ்ச்சியை மலையாள பிரபல நடிகரான மோகன்லால் நடத்துகிறார்.  சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள திரை உலகில் உள்ள இவர் கடந்த வருடம் லால் சலாம் என்னும் தொலைக்காட்சி நிகழ்வின் மூலம் சின்னத் திரையில் கால் பதித்தார்.

இந்த நிகழ்வில் ஸ்வேதா மேனன், தீபன் முரளி, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீனிஷ் அரவிந்த், ஹிமா சங்கர், அரிஸ்டோ சுரேஷ், தியா சனா, அனூப் சந்திரன், அதிதி ராய், பஷீர் பாஷி, மனோஜ் வர்மா, பியர்ல் மானே, டேவிட் ஜான், சாபு, அர்ச்சனா சுசீலன் மற்றும் ரஞ்சனி ஹரிதாஸ் ஆகியோர் பங்கு பெறுகின்றனர்.    மலையாள ரசிகர்களிடையே இந்நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பங்கு கொள்ளும் ரஞ்சனி ஹரிதாஸ் மற்றும் சாபு ஆகியோருக்கிடையே ஏற்கனவே சமூக வலை தளம் மூலம் பிணக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.