டில்லி

லகை அச்சுறுத்தி வந்த சீன ராக்கெட்டான லாங்க் மார்ச் 5பி ராக்கெட்டின் ராட்சத பாகங்கள் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்துள்ளன.

உலகெங்கும் பல நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கி உள்ளன.   இதில் அமெரிக்கா , ரஷ்யா ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைத்துள்ளன.  இந்த நாடுகள் இந்த மையத்தில் இருந்து ஆய்வுகளை நடத்தி வருகின்றன.

எனவே இந்நாடுகளுக்குப் போட்டியாகச் சீனா தனியாக டியுன்ஹி என்னும் பெயரில் விண்வெளி ஆய்வு மையம் ஒன்றை அமைத்து வருகிறது.   இதில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு நடத்தக்  கடந்த மாதம் 29 ஆம் தேதி சீனா ஒரு ராக்கெட்டை அனுப்பியது.   இந்த ராக்கெட்டின் பெயர் லாங்க் மார்ச் 5 பி என்பதாகும்.

இந்த ராக்கெட் தான் எடுத்துச் சென்ற விண்கலத்தை விண்ணில் நிறுவி விட்டு பூமிக்கும் திரும்பும் என சீனா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்,     ஆனால் திடீரென இந்த ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கித் திரும்பியதால் உலகம் அதிர்ந்து போனது.  உலக நாடுகளில் எங்கு இந்த பாகங்கள் விழுந்தாலும் கடும் சேதம் ஏற்படும் என அஞ்சப்பட்டது.

இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் சுற்றி வந்த இந்த ராக்கெட் உடைந்து அதன் பெரிய பெரிய பாகங்கள் இந்தியப் பெருங்கடலில் விழுந்துள்ளது.   இதனால் உலக நாடுகள் அனைத்தும் சேதம் இன்றி தப்பித்துள்ளன.