பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 3 கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. 3வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை (நவம்பர் 7ந்தேதி) நடைபெற உளளது.

இதற்கான இறுதி கட்ட தேர்தல் பிரசாரம்  நேற்று மாலையுடன் முடிவடைந்தது.  நாளை 78 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சுமார் 2.35 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை செய்ய காத்திருக்கிறார்கள்.

243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 29 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, சட்டமன்ற தேர்தல் தேதியை அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையம்  அறிவித்தது. அதன்படி,  அங்கு  3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே கடந்த 28ம் தேதி முதல் கட்ட தேர்தல்  71 தொகுதிகளில் நடைபெற்றது.  இங்கு  54.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

தொடர்ந்து 2வது கட்ட வாக்குப்பதிவு கடந்த 3ம் தேதியன்று  94 தொகுதிகளில் நடைபெற்றது. இந்த  தேர்தலில் 53.51 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது.

78 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நாளை (நவம்பர் 7ந்தேதி) வாக்குப்பதிவு  நடைபெற உள்ளது.

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள  16 மாவட்டங்களைச் சேர்ந்த  78 தொகுதிகளில் நேற்று மாலையுடன்  தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது.

தேர்தல் நடைபெற 78 தொகுதிகளில் மொத்தம் 2.35 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில்  1.23 கோடி ஆண்களும், 1.12 கோடி பெண்களும், 894 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். அவர்கள்  தங்களது வாக்குகளை நாளை பதிவு செய்ய தயாராகி வருகின்றனர்.

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள 78 தொகுதிகளில் மொத்தம் 1,204 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கைகட்டா தொகுதியில் அதிகபட்சமாக 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதேசமயம் டாக்கா, திரிவேனிகஞ்ச், ஜோகிஹாட் மற்றும் பகதூர்கஞ்ச் ஆகிய தொகுதிகளில் குறைந்தபட்சமாக தலா 9 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் முடிந்த பிறகு, வரும்  10ம் தேதி (நவம்பர்) பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.