பாட்னா:

பீகார் மாநிலம் முசார்பூர் மாவட்டத்தில் அசுர வேகத்தில் வந்த பொலிரோ கார் பள்ளி கட்டடத்தின் மோதியதில் 9 மாணவ மாணவிகள் இறந்தனர். 24 பேர் படுகாயமடைந்தனர். இந்த காரை ஓட்டி வந்தது பாஜக எம்எல்ஏ மனோஜ் பய்த்தா என்று புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் இருந்து மட்டும் இல்லாமல், குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாஜக தலைவர் விஷயத்திலும் பாஜக விலகியே நிற்கிறது.

இது குறித்து பாஜக துணைத் தலைவர் தேவேஷ்குமார் கூறுகையில், ‘‘விபத்து ஏற்படுத்திய கார் பாஜக தலைவருக்கு சொந்தமானது என்று கூறுவது முழுக்க முழுக்க தவறாகும். பாஜக.வில் மனோஜ் பய்த்தா என்ற பெயரில் தலைவரும் கிடையாது. தொண்டரும் கிடையாது. அதேபோல் கட்சி நிர்வாகி யாரும் இந்த பெயரில் இல்லை.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த விசாரணைக்கு முதல்வரும் உத்தரவிட்டுள்ளார். விரைவில் கார் உரிமையாளர் யார்? என்பது தெரியவரும்’’ என்றார்.

விபத்து ஏற்படுத்திய காரில் பாஜக பெயர் பலகையில் மனோஜ் பய்த்தா, பிரதேஜ் மந்த்ரில மகாதலித் மஞ்ச் என்று எழுதியிருந்ததை சம்பவ இடத்தில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர். சிதமார்கி மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக பய்த்தா உள்ளார். அதோடு பய்த்தா காரை ஓட்டி வந்ததை பலர் நேரில் பார்த்துள்ளனர். விபத்து நடந்தவுடன் அவர் அங்கிருந்து ஓடிவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த குழந்தைகளை பார்வையிட்ட ராஷ்டரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வீ யாதவ் கூறுகையில், ‘‘விபத்து ஏற்படுத்திய கார் பாஜக தலைவருக்கு சொந்தமானது. காரை ஓட்டிவந்தவர் போதையில் இருந்துள்ளார். பீகாரில் மதுவிலக்கு அமலில் இருக்கும் போது காரை ஓட்டிவந்தவருக்கு எப்படி மது கிடைத்தது’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.