பீகார் சட்டப்பேரவை தேர்தல் : பாஜக மற்றும் லோக் ஜன சக்தி திண்டாட்டம்

பாட்னா

பீகார் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பாஜகவும் லோக் ஜன சக்தியும் கடும் திண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளன.

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சுமார் 3 வாரங்களே உள்ளன.   இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு இடையில் போட்டி இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் திடீர் என தேர்தல் களத்தில் பல மாறுதல்கள் தென்பட்டு வருகின்றன.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டால் ஏற்பட்ட இழுபறி காரணமாகப் பிளவு ஏற்பட்டது.  அதன் பிறகு ராகுல் காந்தி முயற்சியால் கூட்டணி ஒன்று சேர்ந்து சுமுகமான முறையில் தொகுதிப் பங்கீடு நடந்தது. ஆனால் ஆளும் பாஜக கூட்டணியில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.   ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் இதுவரை பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் உள்ளார்.

ஆனால் அவரை நம்பி பாஜக தாங்கள் கூட்டணியில் உள்ளதாகவும் முதல்வர் பதவியில் நிதிஷ்குமார் தொடரலாம் எனவும் தெரிவித்தது.  பாஜக 121 இடங்களிலும் ஐஜத 122 இடங்களிலும் போட்டியிடும் எனவும்  எத்தனை இடங்களில் ஐஜத வென்றாலும்  நிதிஷ் குமாருக்கு முதல்வர் பதவி  அளிக்க பாஜக ஒப்புக் கொண்டுள்ளது.   ஆயினும் நிதிஷ்குமார் பச்சைக்கொடி காட்டாததால் குழப்பம் நிலவுகிறது.

இந்த கூட்டணியில் இருந்து விலகித் தனித்துப் போட்டியிடும்  சிராக் பஸ்வானின் கட்சியான லோக் ஜன் சக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் தற்போது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உள்ளார்.  அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது.  இந்நிலையில் தற்போது அக்கட்சியின் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்து லோஜச போட்டியிடும் தொகுதிகளில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வதும் கேள்விக்குறி ஆகி உள்ளது.  லோ ஜ ச கட்சி இன்னும் மத்திய பாஜக கூட்டணியில் நீடித்து வருகிறது.  எனவே பாஜகவை எதிர்த்து பிரசாரம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தாலும் பிரச்சாரம் செய்ய முடியாத திண்டாட்டத்தில் லோஜச இருந்து வருகிறது.