பாட்னா: பீகார் சட்டசபை கூட்டம் வரும் 23ம் தேதி முதல் 27 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அம்மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 243 இடங்களில் 125 தொகுதிகளை இந்த கூட்டணி வென்றது.

அதில் பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. முதலமைச்சர் நிதீஷ் குமாருடன் 2 துணை முதலமைச்சகள் உள்ளிட்ட 14 போ் அமைச்சா்களாக நேற்று பதவியேற்றனா்.

புதிய அமைச்சா்களில் 7 போ் பாஜகவினர் ஆவா். ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 5 பேரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, விகாஸ்ஷீல் இன்சான் கட்சிகள் சார்பில் தலா ஒருவரும் அமைச்சா்களாக பொறுப்பேற்றனர்.

இந் நிலையில்,  பீகார் சட்டசபை கூட்டம் வரும் 23ம் தேதி முதல் 27 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 23ம் தேதியே மாநில மேலவையும் கூட்டப்பட உள்ளது.

இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு மாநில ஆளுநர் தலைமை வகிப்பார்.  கூட்டத்தில் ஆளுநர் ஆற்ற வேண்டிய உரையினை முடிவு செய்ய முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. நவம்பர் 23ம் தேதி சட்டசபை கூடும் பொழுது சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.