பாட்னா

மோடி குறித்து யாராவது விரல் நீட்டிப் பேசினால் விரல்களை துண்டிப்பேன் என பேசியதற்கு பீகார் மாநில பாஜக தலைவர் நித்யானந்த் ராய் மன்னிப்பு  கோரி உள்ளார்.

கடந்த திங்கள் அன்று பீகாரில் கானு மற்றும் வைசிய சமுகத்தினர் ஒரு நிகழ்வு ஒன்றை நடத்தினர்.  அதில் பீகார் மாநில பா ஜ க தலைவர் நித்யானந்த் ராய் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் அவருடன் பீகார் மாநில துணை முதல்வர் சுஷில்குமார் மோடி மற்றும் பல மூத்த அமைச்சர்கள் கலந்துக் கொண்டார்கள்.

அப்போது அவர், ”ஏழைக்கு மகனாக பிறந்த மோடி தற்போது நாட்டின் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ளார்.  அந்த பிரதமர் பதவிக்கும் மோடிக்கும் நாம் கவுரவம் அளிக்க வேண்டும். யாராவது இனி மோடிக்கு எதிராக கைகளையோ விரல்களையோ நீட்டிப் பேசினால் அவைகள் வெட்டி எறியப்படும்” என கூறினார்.  இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர்.

தனது பேச்சு பெரும் சர்ச்சையை உண்டாக்கியதால் தற்போது நித்யானந்த் ராய் அதற்கு மன்னிப்பு கோரி உள்ளார்.  ஏதோ ஒரு வேகத்தில் தன்னையும் அறியாமல் அப்படி பேசியதாகவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் பாட்னாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறி உள்ளார்.