பீகார்: 2 ராணுவ வீரர்களின் உயிர் தியாகம் அவமதிப்பு….நிதிஷ்குமார், பாஜக மீது குற்றச்சாட்டு

பாட்னா:

பீகாரில் இரு ராணுவ வீரர்களில் உயிர் தியாகத்தை மாநில அரசும், பாஜக.வும் அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் பிரோ கிராமத்தை சேர்ந்த முஜாகித்கான் (வயது 24) என்ற சிஆர்பிஎப் வீரர் பலியானார். அவரது உடல் சொந்த கிராமத்தில் கடந்த 14ம் தேதி முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

முதல்வர் நிதிஷ்குமார், அமைச்சர்கள் என யாரும் இதில் கலந்து கொண்டு அந்த தியாகியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வரவில்லை. அரசு சார்பிலும் யாரும் வரவில்லை. கூட்டணி கட்சியான பாஜக தரப்பில் இருந்தும் யாரும் அஞ்சலி செலுத்தவில்லை.

குறைந்தபட்சம் கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்டோரும் வராதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ராணுவ வீரரின் தியாகத்தை அவமதிக்கும் வகையில் உயிரிழப்புக்கு மாநில அரசு அறிவித்த ரூ. 5 லட்சம் நிதியுதவியை அவரது குடும்பத்தினர் நிராகரித்துவிட்டனர்.

இது குறித்து அமைச்சரும், பாஜக மூத்த தலைவர் வினோத் சிங் கூறுகையில், ‘‘ அவரது தியாகத்துக்கு எனது இதய பூர்வமான மரியாதையையும், வணக்கத்தையும் செலுத்துகிறேன். நான் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்வதால் எந்த மாற்றமும் நடந்துவிட போவது கிடையாது. நான் சென்றால் அவர் மீண்டும் உயிர் பெற்றுவிடுவாரா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல் பீகார் கஹாரியா மாவட்டத்தை கிஷோர் குமார் என்ற ராணுவ வீரரும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் படுகாயமடைந்தார். ஜம்மு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். அவருக்கு ரூ. 11 லட்சம் நிதியுதவியை மாநில அரசு அறிவித்துள்ளது. இவரது இறுதி ஊர்வலமும் சொந்த ஊரில் நடந்தது. இதிலும் அரசு சார்பில் யாரும் கலந்துகொண்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவில்லை.

தேசிய வாதம் குறித்து பேசும் பாஜக.வும், கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த தவறிவிட்டது. ராணுவ வீரர்களின் தியாகத்தை இந்த இரு கட்சிகளும் அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.