பீகார்: பாஜக கூட்டணியில் இருந்து விலக நிதிஷ்குமார் கட்சியில் நெருக்கடி

பாட்னா:

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் இத்தேர்தலை சந்திக்க தயாராகி கொண்டிருக்கின்றன. இதற்காக கூட்டணி அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

பீகாரில் பாஜக&ஐக்கிய ஜனதா தள கூட்டணியில் இட பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் பாஜக கூட்டணியில் இருந்து விலக வேண்டிய கட்டாய நிலை நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் கூறுகையில்,‘‘கூட்டணி தொடர்பாக பரபரப்பு செய்தி வெளியிடுவதை பாஜக கட்டுப்படுத்த வேண்டும். 2014ம் ஆண்டு தேர்தலுக்கும், 2019ம் ஆண்டு தேர்தலுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. பீகாரில் நிதிஷ்குமார் இல்லாமல் பாஜக.வால் வெற்றி பெற முடியாது என்பது அக்கட்சிக்கு நன்றாக தெரியும். கூட்டணி இல்லை என்றால் அவர்கள் 40 தொகுதிகளிலும் தாரளமாக போட்டியிடலாம்’’ என்றார்.

காஷ்மீரில் பிடிபி ஆட்சிக்கு பாஜக அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதை தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளது. காஷ்மீரில் பாஜக எடுத்த முடிவு ஐக்கிய ஜனதா தளத்தை சிந்திக்க வைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகி வந்தால் அக்கட்சியையும் பிரம்மாண்ட கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது.

இது குறித்து சஞ்சய் சிங் கூறுகையில்,‘‘பாசிச கட்சியான பாஜக.வுடன் நிதிஷ்குமார் உள்ளார். எந்த கட்டாயத்தின் பேரில் பாஜக.வுடன் அவர் கை கோர்த்துள்ளார் என்பது தெரியவில்லை. அவர்களுடனான உறவு இணக்கமாக இல்லை’’ என்றார்.

நிதிஷ்குமார் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி தலைவருமான மஞ்சி கூறுகையில்,‘‘நிதிஷ்குமார் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டு தான் பிரம்மாண்ட கூட்டணியில் இணைய வேண்டும். இதையடுத்து 2020ம் ஆண்டில் தேஜஸ்வி தான் முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தப்படுவார்’’என்றார்.

2015ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக.வுக்கு எதிராக காங்கிரஸ், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டு தான் வெற்றி பெற்றன. ஆனால், இவர்களை கழட்டிவிட்டுவிட்டு பாஜக.வுடன் நிதிஷ்குமார் கைகோர்த்து தற்போது ஆட்சி செய்து வருகிறார்.

பிரம்மாண்ட கூட்டணியில் நிதிஷ்குமாருக்கான கதவு அடைக்கப்பட்டு விட்டது என்று தேஜஸ்வி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

இதில் பாஜக, ஐக்கிய ஜனதா தள கூட்டணி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். நிதிஷ்குமாரின் மோசமான நிர்வாகத்தை முன்வைத்து தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று தேதஜஸ்வி நம்பிக்கையுடன் உள்ளார்.