பாட்னா :

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றுள்ளது. “தங்கள் கூட்டணி வென்றால் நிதீஷ்குமார் தான் மீண்டும் முதல்-அமைச்சர்” என தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஆனால், இந்த தேர்தலில் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பா.ஜ.க.வை விட குறைவான இடங்களில் வென்றுள்ளதால், முதல்வர் பதவியை பா.ஜ.க. கேட்கலாம் என செய்திகள் பரவி உள்ளன.

குறைந்த பட்சம் முதல்-அமைச்சர் பதவியை சுழற்சி முறையில் இரு கட்சிகளும் வகிக்கலாம் என பீகார் மாநில பா.ஜ.க வினர் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

இது குறித்து பா.ஜ.க. பொதுச்செயலாளரும், பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு வியூகம் அமைத்தவருமான பூபேந்திர யாதவிடம் கேட்டபோது “நிதீஷ்குமார் தான் முதல்-அமைச்சர் என உறுதியாக நாங்கள் சொல்லி விட்டோம். பா.ஜக.வினர் ஒழுக்கமானவர்கள், அவர்களுக்கு, அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது” என்று பதில் அளித்தார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வெற்றி வாய்ப்பை பறித்த சிராக் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி குறித்த கேள்விக்கு பதில் அளித்த பூபேந்திர யாதவ் “லோக்ஜனசக்தி பீகாரில் எங்கள் கூட்டணியில் இல்லை. தனித்து நின்ற அந்த கட்சிக்கு பீகார் வாக்காளார்கள் பதில் சொல்லி விட்டார்கள்” என தெரிவித்தார்.

– பா. பாரதி