எதிர்க்கட்சிளுக்கு பதிலடி கொடுக்க, பீகாரில் பத்திரிகை ஆரம்பித்த ஆளுங்கட்சி….
பீகார் மாநில முதல்-அமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார்,நான்காம் முறையாகப் பொறுப்பேற்றுள்ளார்.
பா.ஜ.க. தயவில் அவரது ஆட்சி நடக்கும் நிலையில், அண்மைக்காலமாகப் பீகார் மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதனால், ஆர்.ஜே.டி.கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், தினமும் நிதிஷ்குமார் அரசை வறுத்தெடுத்து வருகிறார்.
தேஜஸ்வி யாதவுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து செய்திகள் வெளியிடுகின்றன.
சமூக வலைத்தளங்களிலும் , நிதிஷ்குமார் அரசுக்கு எதிராகக் கடுமையாக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
.
நாள் தோறும் அரசை விமர்சிக்கும் தேஜஸ்வி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பத்திரிகை தொடங்கியுள்ளது.
‘’ஜே.டி.யு- சந்தான்’’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பத்திரிகை, மாதம் தோறும் வெளியாகும்.
ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் அச்சிடப்படுகிறது.
 பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி அலுவலகத்தில் இந்த பத்திரிகையின் முதல் பிரதியைக் கட்சியின் தேசிய தலைவர் ஆர்.சி.பி.சிங் வெளியிட்டார்.
பீகார் மாநிலத்தில்,பிராந்திய கட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ள முதல் அரசியல் பத்திரிகை, ஐக்கிய ஜனதா தளத்தின் பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது.
-பா.பாரதி.