Random image

சுடுகாட்டில் இடம் தராததால் மனைவியை வீட்டிலேயே புதைத்த மகாதலித்

பீகார்

பீகாரில் மகாதலித் ஒருவரின் மனைவியை புதைக்க அவ்வூர் மக்கள் இடம் தராததால் அவர் தன் மனைவியை வீட்டிலேயே புதைத்துள்ளார்.

பீகாரில் தலித்துகளில் பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த நிலையில் உள்ளவர்கள் அதிகமாக உள்ளனர்.   ஆகையால் அவர்களை ஒன்றிணைத்து மகாதலித் என்னும் சிறப்பு பிரிவை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஏற்படுத்தி உள்ளார்.  இதன் மூலம் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கும் என அவர் அப்போது தெரிவித்தார்.

பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரின் பெயர் கேவடோகமா.   இங்கு மகாதலித் பிரிவை சேர்ந்த ஹர்மராயன் ரிஷிதேவ் என்னும் 40 வயதுள்ள ஒருவர் வசித்து வந்தார்.  இவருடைய மனைவி சகோகிய தேவி என்பவர் கடந்த ஒரு வாரமாக வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டு வந்தார்.   அவர் ஞாயிற்றுக் கிழமை அன்று மரணம் அடைந்து விட்டார்.

அவ்வூர் மக்கள் சாதியை காரணம் காட்டி சகோகிய தேவியின் இறுதிச்சடங்கை நடத்த சுடுகாட்டில் இடம் தர மறுத்துள்ளனர்.  ஹர்மராயன் அவர்களிடம் மிகவும் கெஞ்சி கேட்டும் இடம் தராமல் விரட்டி அடித்துள்ளனர்.   இதனால் அவர் தனது வீட்டிலேயே மனைவியின் சடலத்தை புதைத்துள்ளார்.   இந்த விவரம் மாநிலம் எங்கும் பரவியது.

சாதி மத பேதம் கிடையாது எனவும் அனைவரும் சமம் எனவும் முழங்கும் சமூகத்தில் சாதியின் காரணமாக சுடுகாட்டில் இடம் தராதது குறித்து சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  அத்துடன் அவர்கள் நாட்டில் தலித்துகள் மீதான கொடுமை சிறிதும் ஓயவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.