பாட்னா: பீகார் மாநில துணைமுதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. நிதிஷ்குமார் கூட்டணியைச் சேர்ந்த பாஜக இன்றுதான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தடுப்பூசி இலவசம் உள்பட பல்வேறு சலுகைகளை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பதிவில், தனக்கு எடுக்கப்பட்ட  அனைத்து பரிசோதனைகளும் இயல்பாக இருப்பதாகவும், லேசான காய்ச்சல் மட்டுமே இருந்ததாகவும், விரைவில் தேர்தல் பிரச்சாரத்திற்கு திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,   சாமானிய மக்கள் முதல் களப்பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், காவலர்கள்,  தன்னார்வலர்கள்,  மக்கள் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.