பீகார் சட்டசபை தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு

தர்பங்கா: பீகார் சட்டசபை தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரில் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  அதன்படி, முதல் கட்ட தேர்தல் அக்டோபர் 28ம்  தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 3ம் தேதியும் நிறைவடைந்தது.  3வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது.

மொத்தம் 78 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. சீமாஞ்சல் பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஹயகாட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ரவீந்திரநாத் சிங் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். தர்பங்காவில் உள்ள தத்தோபூர் பகுதியில் வைத்து இந்த துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளது.

படுகாயமடைந்த அவர், மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.  துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தர்பங்கா எஸ்பி அசோக் பிரசாத் கூறியதாவது: நாங்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை நடக்கிறது என்று கூறினார்.