பாட்னா: பீகார் மாநிலத்தில் பா.ஜ. அங்கம் வகிக்கும் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெல்லும் என்று தகவல்கள் பரப்பப்பட்டு வந்த நிலையில், வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் – ஆர்ஜேடி கூட்டணியே வெல்லும் என்று கூறியுள்ளன.

பீகார் சட்டசபை தேர்தல் ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலில், பிரதான கூட்டணிகளாக, பா.ஜ. அங்கம் வகிக்கும் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான, காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய மகாபந்தன் கூட்டணியும் களத்தில் உள்ளன.

இவைதவிர, மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் கட்சியும் தனித்து களம் காண்கிறது.

இந்நிலையில், வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகாபந்தன் கூட்டணி, 139 முதல் 161 இடங்களை வெல்லும் எனவும், பா.ஜ. இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி 69 முதல் 91 இடங்களையே வெல்லும் எனவும் கூறியுள்ளது.

சிராக் பஸ்வானின் கட்சி 3 முதல் 5 இடங்களை வெல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 6 முதல் 10 இடங்களை வெல்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், வாக்குப் பதிவு சதவிகிதம் என்று வருகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 39% வாக்குகளைப் பெறும் என்றும், மகாபந்தன் கூட்டணி 44% வாக்குகளைப் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிராக் பஸ்வானின் கட்சிக்கு 7% கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.