பாட்னா: உள்ளூர் சர்க்கரை ஆலை பிரச்சினைகளால், பீகாரின் சில பகுதி விவசாயிகள், தங்களின் விலைந்த கரும்பை, நேபாளத்தில் விற்பனை செய்கிறார்கள். நேபாளத்தில், அவர்களது கரும்பிற்கான விலை, உள்ளூரைவிட அதிகமாகவே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பீகாரின் சித்தமர்ஹி பகுதியில் இருக்கும் தனியார் சர்க்கரை ஆலைகள், பல நிர்வாக குளறுபடிகளால் தற்போது மூடப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதி கரும்பு விவசாயிகள் அதிர்ச்சியடைந்தாலும், நேபாளம் அவர்களின் பகுதியிலிருந்து வெறும் 4 கி.மீ. தொலைவிலேயே இருந்தது அவர்களுக்குப் பெரிய சாதகம்.

நேபாளத்தில், ஒரு குவின்டால் கரும்புக்கு ரூ.215 கிடைக்கிறது. ஆனால், பீகாரில், இடைத்தரகர்கள் மூலம் கரும்பு விற்கப்படுவதால், ஒரு குவின்டால் கரும்புக்கு ரூ.180 வரையே கிடைக்கிறது. எனவே, நேபாளத்தில் கரும்பை விற்பனை செய்வது, பீகார் விவசாயிகளுக்கு லாபகரமான ஒன்றாகவே உள்ளது.

நேபாளம், இந்தியாவுடன் 1700 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. அதில் பீகாருடன் மட்டும் 720 கிமீ நீள எல்லைப் பகிரப்படுகிறது. கடந்த ஓராண்டாக மூடப்பட்டிருந்த இந்திய – நேபாள எல்லை, கடந்த பிப்ரவரியில்தான் மீண்டும் திறக்கப்பட்டது. இதன்மூலம், நேபாள எல்லையையொட்டிய பீகார் கரும்பு விவசாயிகளின் வாழ்வில் மகிழ்ச்சி பிறந்துள்ளது.