பாட்னா: பீகாரில் மணமகன் கொரோனாவால் உயிரிழக்க, திருமண விருந்தில் கலந்து கொண்ட 95 விருந்தினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

பாட்னாவில் உள்ள தீபாலி என்ற கிராமத்தில் மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் நடந்த 2 நாள் கழித்து அந்த மணமகன் இறந்துவிட்டார். அவர் கோவிட் 19 சோதனை செய்யப்படாமல் தகனம் செய்யப்பட்டார்.

பாட்னாவில் உள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு இந்த மரணம் குறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் சோதிக்கப்பட்டனர். திருமண கொண்டாட்டங்களில் கலந்து கொண்டவர்களில் 15 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பிறகு மேலும் 80 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கும் கொரோனா கண்டறியப்பட்டது. முன்னதாக காவல்துறை வெளியிட்டுள்ள தகவல் படி, 30 வயதான மணமகன் தனது திருமணத்திற்காக மே 12 அன்று தனது கிராமமான தீபாலிக்கு திரும்பினார்.

அந்த காலகட்டத்தில், அவர் கோவிட் 19 அறிகுறிகளுடன் இருந்தார். ஆனால் குடும்பம் திருமணம் நடத்த ஆயத்தமானது. திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவர் பாட்னாவின் எய்ம்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு திருமண விழாவிலும் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதால், சமூக தொலைதூர விதிமுறைகள் இந்த நிகழ்ச்சியில் பின்பற்றப்படவில்லை என்பதை நிர்வாகம் தெரிவித்துள்ளது.