குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்து தீர்மானம் இயற்றிய முதல் பாஜக கூட்டணி மாநிலம் பீகார்

பாட்னா

பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் பீகார் மாநிலத்தில் நேற்று குடிமக்கள் பதிவேடு மற்றும் புதிய மக்கள் தொகை பதிவேட்டை எதிர்த்து தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

நாடெங்கும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் பல மாநிலங்களில் குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டுள்ளன.  இதைப்போல் புதிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.  பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் பீகார் மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிறது.  இந்த மாநில அமைச்சரவையில் பாஜகவும் இடம் பெற்றுள்ளது.

நேற்று பீகார் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கூடியது.  அப்போது எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குடியுரிமை சட்டம், குடிமக்கள் பதிவேடு மற்றும் மக்கள் தொகை பதிவேடு ஆகியவை குறித்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தக் கோரினார். முதல்வர் அந்த நேரத்தில்  பேரவையில் இல்லாததால், சட்டப்பேரவை விவகாரங்களுக்கான அமைச்சர் ஷரவண் குமார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.  அதன் பிறகு, கேள்வி நேரத்துக்குப் பின்னர் விவாதம் நடத்துவதற்குச் சபாநாயகர் விஜய் குமார் சவுத்ரி அனுமதி  அளித்தார்.

ஆயினும் அவையில் குழப்பம் ஏற்பட்டதையடுத்து பேரவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் பேரவை கூடியதும் ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் நிதிஷ் குமார், ‘‘பீகார் மாநிலத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு   செயல்படுத்துவதில் ஒரு குழப்பமும் இருக்காது. அந்த பதிவேட்டில் உள்ள சர்ச்சைக்குரிய பிரிவுகளான, பெற்றோரின் பிறப்பு குறித்த தகவல்களை நீக்கும்படி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளேன். எனக்கும் என்னுடைய தாய் எப்போது பிறந்தார்  என்ற விவரங்கள் தெரியாது’.

தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2010ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு முறையிலேயே நடத்தப்படும். சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களும் ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் சாதி வாரிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான புதிய  தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்படும்’’ என தெரிவித்தார்.

மதிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அவை கூடி போது, தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சாதி வாரியான அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவும் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஒப்புக் கொண்டதால் புதிய தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே இதுவரை தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளன.  பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் இவ்வாறு தீர்மானம் இயற்றப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.