என்ஆர்சி யை நிராகரித்த முதல் என்டிஏ மாநிலம் பீகார்: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: என்ஆர்சி நடைமுறைக்கு எதிராக முதன்முதலாக சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றியுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்டிஏ) ஆட்சிபுரியும் மாநிலம் பீகார்தான் என்று தெரிவித்துள்ளார் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்.

இவர், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவின் மகனும், பீகாரின் முன்னாள் துணை முதல்வருமாவார்.

அவர் கூறியுள்ளதாவது, “குடியுரிமைப் பிரச்சினை தொடர்பாக, தாங்கள் மேற்கொண்ட முடிவிலிருந்து ஒரு அடிகூட பின்வாங்க மாட்டோம் என்று கூறியவர்கள், இன்று பீகாரில் அதை திரும்பப் பெற்றுள்ளனர்.

இது ஜனநாயகத்திற்கான வெற்றி. மக்களின் கனவை நாங்கள் இப்போது நிறைவேற்றியுள்ளோம். அவர்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை” என்றுள்ளார்.

அதேசமயம், என்பிஆர் நடைமுறையை ஏற்பதாக தீர்மானத்தை பீகார் சட்டசபை நிறைவேற்றியிருந்தாலும், அதை கடந்த 2010ம் ஆண்டின் வடிவிலேயே அமல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.