பீகார்: லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட ஐக்கிய ஜனதா தளம் தயார்….பாஜக கூட்டணியில் சலசலப்பு

பாட்னா:

நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் தனித்து போட்டியிட தயாராக இருப்பதாக ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது. இதனால் பாஜக.வுக்கு தான் இழப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்க்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராகி வருகிறது. பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது.

பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. இந்நிலையில் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியது. இருப்பினும் கூட்டணி இருதரப்பிலும் உறுதி செய்யப்பட்டது. கடந்த 2014 தேர்தலில் பா.ஜ.க. பீகாரில் 22 தொகுதிகளை தனதாக்கியது, அதன் கூட்டணியில் போட்டியிட்ட லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது.

இப்போது அதே கணக்கில் போட்டியிட பா.ஜ.க. தயாராவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பா.ஜ.க.விற்கு 20 தொகுதிகளும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 12 தொகுதிகளும், லோக் ஜனசக்திக்கு 6 தொகுதிகளும், பிற கட்சிகளுக்கு 2 தொகுதிகளும் வழங்கப்படும் என முதல்கட்ட பேச்சுவார்த்தையில் முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால் அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் இதனை ஏற்க மறுப்பதாக தெரிகிறது.

பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் மாநிலத்தில் தலா 17 தொகுதிகளில் போட்டியிடும், மீதம் இருக்கும் 6 தொகுதிகள் லோக் ஜன கட்சி போன்ற பிற கட்சிகளுக்கு வழங்கப்படும் என ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சமீபத்திய இடைத்தேர்தல்களில் தோல்வி, கர்நாடக மாநில தேர்தலில் தோல்வி உள்ளிட்ட காரணங்களால் ஐக்கிய ஜனதா தளம் இறங்க மறுக்கிறது.

தேர்தல் பணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. தலைவர்களில் ஒருவர் கூறுகையில், ”நாங்கள் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றோம், அநத தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுவோம், எங்களுடைய தொகுதிகளை விட்டுக்கொடும் பேச்சுக்கே இடம் கிடையாது,” என கூறியதாக என்.டி.டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது. எங்களால் குறைந்தப்பட்சம் 10 தொகுதிகளைதான் கொடுக்க முடியும்’’ என்றார். .

மறுபுறம் ஐக்கிய ஜனதா தளம் தரப்பில் கூறுகையில், “ பா.ஜ.க. எங்களுடைய கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் தனியாக தேர்தலை சந்திப்போம், இது நாடாளுமன்றத் தேர்தல், நிதிஷ் குமார் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை. பா.ஜ.க.விற்குதான் இழப்பு,” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது என்றே தெரிகிறது.