பீஹார் மத்திய பல்கலைக்கழகம் இன்று ஆன்லைனில் மாணவர்களுக்கு தேர்வு நடத்துகிறது

பாட்னா

பீஹார் மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகம், இன்று பி.காம் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே வாட்ஸ்ஆப் செயலி மூலம் தேர்வு நடத்துகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் கல்வி நிலையங்கள் காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பீஹார் மாநிலத்தில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகம் இன்று பி.காம் மாணவர்களுக்கு 4 ஆம் பருவத் தேர்வுகளை ஆன்லைன் வழியே நடத்துகிறது.

இது குறித்த அறிவிப்பை கடந்த 14 தேதி பல்கலைக் கழகம் வெளியிட்டது. அதில் “17, 18 என இருநாட்களாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எழுத்துத் தேர்வு 10 மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வு 10 மதிப்பெண்கள் என்ற முறையில் தேர்வு அமையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மாணவர் கூட்டமைப்பு உறுப்பினர் ரோஹித் மிஸ்ரா கூறுகையில் “யுஜிசி, ஆன்லைன் தேர்வுகள் சாத்தியமா என ஆய்ந்து வரும் சூழலில், MGCU துணைவேந்தர் இவ்வாறு தேர்வுகளை நடத்துவது ஏன்” என கேள்வி எழுப்பினார்.

மற்றோரு மாணவரான நிகில் தாகூர், “இது தேர்விற்கான சரியான வழிமுறை அல்ல. கிராமங்களில் மாணவர்களுக்கு எல்லா இடங்களிலும், எல்லா நேரமும் இணையப் பயன்பாடு எப்படி சாத்தியம்” எனக் கூறினார்.

இந்நிலையில் பல்கலைக் கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்கள் தேர்வு குறித்து கவலையுற வேண்டாம்.  இது செமஸ்டர் தேர்வு அல்ல, அகமதிப்பீட்டுத் (Internal assesment) தேர்வு தான். மாணவர்களுக்கு தேர்வில் ஏதேனும் பிரச்சினை எழுந்தால் அதற்கு மாற்று வழி செய்யப்படும். எனவே யாரும் அச்சப்பட வேண்டாம்” என கூறப்பட்டுள்ளது.

இதுவரை பல்கலைக் கழக மானியக் குழு (UGC) தேர்வுகளை ஆன்லைன் வழியே நடத்துவது குறித்து எவ்வித வழிகாட்டுதலையும் கல்வி நிலையங்களுக்கு அளிக்கவில்லை.

மேலும் இந்தியாவிலேயே வாட்ஸ்ஆப் செயலி வழியே தேர்வு நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed