பீகார் ரயில்நிலையம் மீது நக்சல் தாக்குதல்! 5 பேர் கடத்தல்

பாட்னா,

பீகார் மாநிலத்தில் ரயில் நிலையம் மீது நக்சலைட்டுக்கள்  நள்ளிரவில் திடீர் தாக்குதல் நடத்தினர்.  அப்போது அந்த ரெயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் உள்பட 5 பேரை கடத்தி சென்றனர்.

பீகார் மாநிலம் ஜமால்பூர் அருகே உள்ள மதுசூதன் ரயில்நிலையத்தில் நேற்று நள்ளிரவு வந்த நக்சலைட்டுக்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும், ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கும் தீ வைத்தனர். அங்கிருந்த பொதுமக்களையும் அடித்து விரட்டினர்.

அதையடுத்து, அப்போது பணியில் இருந்த ரெயில் நிலைய மேலாளர் மற்றும் ரெயில் ஓட்டுநர் உள்பட 5 பேரை அவர்கள் கடத்தி சென்றனர்.

இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் ரெயில்கள் நிறுத்தப்பட்டது.  தகவல் அறிந்து வந்த போலீசார், கடத்தப்பட்டவர்களைத் தேடும பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுசூதன் ரயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.