11,000 பாட்டில்களில் இருந்த மதுவை குடித்துத் தீர்த்த எலிகள் – போலீசார் அதிர்ச்சி

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள 11 ஆயிரம் பாட்டில்களில் இருந்த பீரை எலிகள் குடித்துவிட்டதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

alcohol

பீகார் மாநிலத்தில் கடந்த 2016ல் நிதிஷ் குமார் அரசு மதுவிலக்கைக் கொண்டு வந்தது. எனவே மது குடிப்போர், மது விற்பனை செய்வோர் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வெளி மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள் கடத்தல் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இந்த பாட்டில்களைக் கைப்பற்றும் போலீசார், அவற்றை அழித்து விடுகின்றனர். இதேபோல் சமீபத்தில் சட்டவிரோத மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைமூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிக்க முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவிட்டதை அடுத்து கிடங்கிற்கு சென்று போலீசார் பார்த்துள்ளனர். அப்போது மதுபாட்டில்கள் அனைத்தும் காலியாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு தான் தெரிய வந்தது, சுமார் 11 ஆயிரம் மதுபாட்டில்களில் இருந்த மதுக்களை எலிகள் குடித்து விட்டன என்று.

இது குறித்து விளக்கமளித்த மாவட்ட அதிகாரி கல்பனா குமார், ” கிடங்கில் சுமார் 11,000 பீர் பாட்டில்கள் வைக்கப்பட்டன. அதில் 16 லட்சம் லிட்டர் ஐஎம்எல் அதுவும், 9 லட்சம் லிட்டர் உள்நாட்டு மதுவும் இருந்தன. கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டில்களில் இருந்த பீர் மாயமாகியுள்ளது. அனைத்திலும் சிறு துளை போடப்பட்டுள்ளது. எனவே எலிகள் குடித்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம் ” என்று தெரிவித்தார்.

இதேபோன்று கடந்த ஆண்டும் சம்பவம் நடந்தது. கடந்த ஆண்டு ஆயிரக்கான லிட்டர் மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்து போலீஸார் கிட்டங்கியில் வைத்திருந்தனர். நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் நேரத்தில் மதுபாட்டில்களை ஆய்வு செய்த போது அதில் மது இல்லாமல் இருந்தது, அப்போதும் எலி மீது போலீஸார் பழி சுமத்தினர். இப்போது பாட்டிலில் உள்ள பீர் காணாமல் போனதற்கும் எலிதான் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி