சிபிஐக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போலிஸ் அதிகாரி : துப்பாக்கி சூடு கொண்டாட்டம்

பாட்னா

பீகாரில் ஒரு காவல்துறை அதிகாரி தாம் சிபிஐக்கு பணி புரிய தேர்ந்தெடுக்கப்பட்டதை துப்பாக்கி சூடு நடத்தி கொண்டாடி உள்ளார்.

சமீபத்தில் பல காவல்துறை அதிகாரிகளை உயர் பதவியுடன் சிபிஐக்கு பீகார் மாநில முதல்வர் மாற்றினார்.   அவர்களில் கத்தியார் பகுதியின் காவல்துறை சூப்பிரண்ட் அதிகாரி சித்தார்த் மோகன் ஜெயினும் ஒருவர்.   இதை ஒட்டி அவருக்கு பிரிவுபசார விருந்து ஒன்றை அவருடன் பணி புரிந்த அதிகாரிகள் நடத்தி உள்ளனர்.   அந்த விருந்தில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில் காவல்துறை அதிகாரி மிதிலேஷ் மிச்ரா என்பவர் நட்பைப் பற்றிய ஒரு புகழ்பெற்ற இந்தி திரைப்படப் பாடலை பாடிக்கொண்டிருக்கிறார்.   அருகில் உள்ள சித்தார்த் மோகன் ஜெயின் அவர் அருகில் நின்றபடி தனது கையில் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார்.   பாடலுக்கேற்றபடி இடைவெளி விட்டு இவர் ஒன்பது முறை சுட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டினால் யாரும் காயமடையவில்லை எனினும்  ஒரு அதிகாரி இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.    இந்த வீடியோ பரவியதில் அதை மூத்த காவல்துறை அதிகாரி எஸ் கே சிங்கால் பார்த்துள்ளார் .  அவர் ஜெயின் சிபிஐக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்துள்ளார்.

வட நாட்டில் திருமண நிகழ்வுகளில் இவ்வாறு துப்பாக்கி சூடு நிகழ்வதும் சில சமயம் கவனக் குறைவால் மரணம் ஏற்பட்டு துப்பாக்கி சூடு நிகழ்த்தியவர்களை காவல்துறையினர் கைது செய்வதும் சகஜமான ஒன்று.   ஆனால் ஒரு உயர் அதிகாரி இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்துவது இதுவே முதல் முறையாகும்.   அரசு துப்பாக்கியை இவ்வாறு பயன்படுத்தியதற்காக ஜெயின் மீது வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.