கொல்கத்தா

பீகார் மாநிலத்தில் இருந்து 700 கிமீ தூரம் பல பஸ்கள் மாறிப் பயணம் செய்தும் பீகார் மாணவரால் 10 நிமிட தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியவில்லை.

மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை தற்போது நாடெங்கும் நீட் தேர்வு மூலம் மட்டுமே நடந்து வருகிறது.   நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை சுகாதாரச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.,  எனவே இம்முறை தேர்வு எழுத வரும் மாணவர்கள் குறைந்தது மூன்று மணி நேரம் முன்னதாக வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.  இறுதி நேரம் 1.30 என அறிவிக்கப்பட்டிருந்தது.

நீட் தேர்வு எழுதுவோர் அனைவரும் அந்தந்த ஊரை சேர்ந்தவர்கள் மட்டும் அல்ல என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   அவ்வகையில் பல வெ்ளியூர் மாணவர்கள் நீட் தேர்வு எழுத பல நூறு கிமீ பயணம் செய்து தேர்வுக்கு வர வேண்டியது உள்ளது.   இவ்வாறு பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் யாதவ் என்னும் மா்ணவர் கிழக்கு கொல்கத்தா நகரில் சால்ட் லேக் பகுதியில் உள்ள பள்ளியில் தேர்வு எழுத வேண்டி இருந்தது.

கொல்கத்தா நக்ரை அடைய யாதவ் சுமார் 700 கிமீ தூரத்துக்கும் மேல் பயணம் செய்ய வேண்டி இருந்தது.  எனவே இவர் சனிக்கிழமை காலை 8 மணிக்கு தர்பங்காவில் இருந்து முசாபர்பூர் வரை ஒரு பேருந்தில் சென்றுள்ளார்.  அங்கிருந்து அவர் பாட்னா நகர் செல்ல மற்றொரு பேருந்தில் ஏறி உள்ளார்.  போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த பேருந்து 6 மணி நேரம் தாமதாமாக பாட்னா சென்றுள்ளது.

இரவு 9 மணிக்கு பாட்னாவில் இருந்து கொல்கத்தா செல்லும் பேருந்தில் ஏறிய மாணவரால் பகல் 1.05 மணிக்கு தான் கொல்கத்தா நகருக்குள் செல்ல முடிந்துள்ளது.   அங்கிருந்து அவர் ஒரு டாக்சி மூலம் தேர்வு மையத்துக்கு 1.40 மணிக்கு சென்றுள்ளார்.    தேர்வு 2 மணி என்றாலும் குறிப்பிட்ட நேரம் 1.30 மணிக்குள் முடிவடைந்ததால் தேர்வு அதிகாரிகள் யாதவை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.

அவர் தனது பயண நேரம், வழியில் ஏற்பட்டுள்ள இடைஞ்சல் ஆகியவற்றை எடுத்துச் சொல்லியும் அதிகாரிகள் இரக்கம் காட்ட மறுத்து அவரை தேர்வு எழுத அனுமதிக்கக்வில்லை.   இது குறித்து மாணவர் யாதவ், “2 மணி தேர்வுக்கு நான் 1.40 மணிக்கு சென்றும் என்னை 10 நிமிட தாமதம் கார்ணமாக தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.   இந்த 10 நிமிடத்தால் எனக்கு ஒரு வருடம் வீணாகி விட்டது” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.