டில்லி

ந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் ரெயில்கள் தாமதமாகிறது என்னும் கணக்கெடுப்பின் முடிவு வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ரெயில்கள் தாமதமாவது வழக்கமான ஒன்றாக உள்ளது.   ஒரு புறம்  புல்லட் ரெயில், மெட்ரோ ரெயில் என சாதனைகள் அதிகரித்து வரும் அதே வேளையில் பயணிகள் பலருக்கும் இந்த கால தாமதம் மிகவும் சோதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.   இந்த கால தாமதத்தினால் பலர் தாங்கள் மேற்கொண்டு பயணிக்க வேண்டிய ரெயில்களை தவற விடுவதும்,  பல வெளிநாடு செல்லும் பயணிகள் விமானங்களை தவற விடுவதும் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

தினமும் ரெயில்கள் காலதாமதமாவதை வைத்து ரெயில் யாத்ரி என்னும் அமைப்பு ஒரு கணக்கெடுப்பு எடுத்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.   அதன்படி இந்தியாவில் பீகார் மாநிலத்தில் அதிகம் ரெயில்கள் தாமதமாவது தெரிய வந்துள்ளது.    பீகார் மாநிலத்தில் கடந்த 2015 ஆம் வருடம் சராசரியாக 80 நிமிடங்கள் கால தாமதமாக இருந்தது, 2016 ஆம் வருடம் 93 நிமிடங்களாகவும், 2017 ஆம் வருடாம் 104 நிமிடங்களாகவும் அதிகரித்துள்ளது.   பிகாருக்கு வரும் ரெயில்களில் சுமார் 30% ரெயில்கள் ஒவ்வொரு நாளும் கால தாமதமாகவே வருகின்றன.

அடுத்த இடங்களை உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.

அகில இந்திய அளவில் ரெயில்கள் சராசரியாக 53 நிமிடங்கள் தாமதம் ஆகின்றன.

இவற்றில் மிகவும் குறைந்த அளவில் தாமதம் ஆவது குஜராத் மாநிலத்தில் சராசரி 24 நிமிடங்களாக உள்ளது.    தமிழ்நாடு மாநிலத்தில் 24  நிமிடங்களுக்கு மேல் சில நொடிகள்  அதிகமாக உள்ளதால் அடுத்த இடத்தில் உள்ளது.   கர்னாடகா மாநிலத்தில் சராசரியாக  31 நிமிடங்கள் தாமதமாகி மூன்றாவது இடத்தில் உள்ளது.