பாட்னா :

பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள சிங்கிரியாவன் கிராமத்தை சேர்ந்த மகேஷ் யாதவ் என்ற 60 வயது முதியவர் கடந்த செவ்வாய்க்கிழமை இறந்து போனார்.

அவருக்கு உறவினர்கள் யாரும் கிடையாது.

எனவே மகேஷுக்கு இறுதி சடங்கு செய்து சடலத்தை எரிக்க கிராமத்தினர் முடிவு செய்தனர்.

மகேஷின் உடமைகளை சோதனை செய்த போது, பணம் ஏதும் அவர் வைத்திருக்க வில்லை என்பதால், கிராமத்தினர், இறுதி சடங்கு செலவுக்கு என்ன செய்வது என யோசித்தனர்.

ஆனால் உள்ளூரில் உள்ள வங்கி கணக்கில் மகேஷ் பெயரில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரிய வந்தது.

இதனால் மகேஷ் சடலத்தை சுமந்து கொண்டு அந்த வங்கிக்கு சென்ற கிராமத்தினர், மகேஷ் வங்கி கணக்கில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளனர்.

ஆனால் பணம் கொடுக்க வங்கி அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

பிணத்தை வங்கி முன்பு கிடத்தி “பணம் தராவிட்டால் பிணத்தை எடுக்க மாட்டோம். மகேஷ் இறுதி சடங்கு செலவுக்குத்தான் பணம் கேட்கிறோம்” என கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

வேறு வழி இல்லாமல், வங்கியின் சிறப்பு நிதியில் இருந்து அதன் மானேஜர் 10 ஆயிரம் ரூபாயை கிராம மக்களிடம் கொடுத்துள்ளார். அதன் பிறகே மகேஷ் சடலத்துடன், கிராமத்தினர் வங்கியை விட்டு சென்றனர்.

– பா. பாரதி