உலகளாவிய ஹாட்ஸ்பாட்டாக பீகார் மாறும்! – எச்சரிக்கும் தேஜஸ்வி யாதவ்

--

பாட்னா: குறைவான பரிசோதனைகள் மற்றும் அதிகரித்துவரும் கொரோனா நோயாளிகள் என்ற முரண்பாட்டால், தேசியளவில் மட்டுமல்லாது உலகளவில்கூட, கொரோனா ஹாட்ஸ்பாட்டாக பீகார் மாறும் வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்.

அவர் கூறியதாவது, “பீஹாரில் கொரோனா பரிசோதனை விகிதம் குறைவாக இருந்த போதிலும், பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் 1000க்கும் அதிகமாக உள்ளது.

மக்கள் தொகையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் சோதனைகள் நடத்தப்பட வேண்டும். ஆனால், 10 ஆயிரம் மாதிரிகள் மட்டுமே சோதனையிடப்படுகின்றன. தேவையான எண்ணிக்கையில் சோதனைகள் நடத்தப்பட்டால், ஒவ்வொரு நாளும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பாதிப்புகள் கண்டறியப்பட்டு அதிக பாதிப்பில் நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கும் நம் மாநிலம்.

சோதனை குறைவாக இருப்பதால், தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலகளாவிய ஹாட்ஸ்பாட்டாக மாற வலுவான வாய்ப்பு உள்ளது.

ஜூலை 11 முதல் 17ம் தேதி வரையில், பீஹாரில் பாதிப்பு விகிதம் 13% என்ற அளவில் இருந்தது. இந்தக் காலக்கட்டத்தில், இது நாட்டிலேயே அதிகமாகும். பரிசோதனை விகிதமும் மருத்துவமனைகளில் படுக்கை எண்ணிக்கையும் அதிகரிக்கப்படாவிட்டால், ஜூலை 16 முதல் ஜூலை 31 வரை விதிக்கப்பட்ட முழுமையான ஊரடங்கிற்கான நோக்கம் பயன்படாது” என்றார் அவர்.